அப்போதுதான் விடியத்துவங்கி இருந்தது. காலை சுமார் ஐந்தரை மணி
இருக்கும். பெரம்பூர் பூங்காவில் வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வரும்
மக்கள் வரத்துவங்கி இருந்தார்கள். பூங்கா வாயிலில் அருகம் புல்
ஜூஸ், கீரை, கேரட்வியாபாரிகளும்,
வெயிட்மெஷின் வைத்துக்கொண்டு பி.எம்.ஐ கண்டுபிடிக்கிற கூட்டமும்
கூடியது. யோகா கூட்டம்,
ஆன்மிக கூட்டம், ரியல்எஸ்டேட் புரோக்கர்கள் என
பூங்காவின் வழக்கமான அத்தனை மக்களும் படிப்படியாக வந்து பூங்காவை நிரப்பிக்
கொண்டிருந்தார்கள்.
சாமுவேல் ஆகிவிட்ட கந்தசாமி வழக்கமாக அந்த நேரத்துக்குதான் அங்கு வருவார். கந்தசாமி
ரயில்வேயில் ஜி.எம்-யிடம் டிரைவர் ஆக வேலை பார்த்து
ஓய்வு பெற்றார். 70 களில் சென்னை மாநகரில் பிரபல பாக்ஸராக இருந்தவர். சுகர் வந்த பிறகு
பாக்ஸருக்கான எந்த சுவடும் இல்லை. சுகர்
இருப்பதால் தினமும் வாக்கிங் போவதை அவசியமாக்கிக் கொண்டார்.
மெலிந்த தேகம், கசங்கிய சட்டை,
ரப்பர் செருப்பு என எளிமையாகவே இருப்பார். முன் வழுக்கை இருந்தாலும் பின்னாடி
தியாகராஜ பாகவதர் மாதிரி ஒரு ஹேர் ஸ்டைல்
வெச்சிருப்பார். கிட்டதட்ட ரஜினி இமயமலைக்குப் போகும்போது இருப்பதை போலவே தோற்றமளிப்பார்.
கந்தசாமி நடக்க
தொடங்கினார், பிரெட்ரிக் துரையும் வந்து
சேர்ந்து கொண்டார்.பிரெட்ரிக் துரை வங்கியில்
பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
துரைக்கும் கந்தசாமிக்கும் முப்பது ஆண்டுப் பழக்கம். ரெண்டு பேரும்
காத்தாடி சோக்கு. துரைக்கு
லோட்டாய் புடிக்க சொல்லி
கொடுத்ததே கந்தசாமி தான். ஒரு
காத்தாடி டோர்னமெண்ட் விட மாட்டார்
துரை. குஜராத் வரையெல்லாம் போய்
கலக்கிட்டு வருவார். அவர் வீட்டில் எப்போதும்
குறைந்தபட்சம் 5 கோன் நூல் இருக்கும். துரை எல்லா
டோர்னமெண்டிலும் அசத்துவதற்கு முக்கிய
காரணமே கந்தசாமியின் நூல்
தான். கந்தசாமி ஆத்து கயிறு
மாஞ்சா போட மாட்டார்; பூசு
கயிறு மாஞ்சா தான் போடுவார்.
எப்போதும் பாண்டா 5 நூல் வாங்குவது
தான் வழக்கம். துரைக்கு பாணா காத்தடியை விட
பாம்பே காத்தாடி தான்
பிடிக்கும். அவர் பாம்பே காத்தடியை
பார்த்து “Small is
Beautiful”என்று
சொல்லிட்டே இருப்பார்.
இன்று வாக்கிங்
செல்லும் போது கந்தசாமி
நிறைய முறை அருகிலுள்ள
பெஞ்சில் உட்கார்ந்து ரெஸ்ட்
எடுத்தார். இதை கவனித்து
கொண்டிருந்த துரை ”என்ன கந்தா
டல்லா இருக்க என்னாச்சு?” என்று ஆறுதலாகக் கேட்டார். “அது ஒண்ணுமில்ல துரை. ஆஸ்பெஸ்டாஸ் கூரையில்
அணல் ஜாஸ்தியா இருக்கு.. முடியல. போதாத குறைக்கு இந்த கொசு
உயிரை வாங்குது, கொசு வத்தி ஏற்றலாம்
என்று பார்த்தால் எனக்கு அந்தப் புகை
ஆகாது. 3 மணிக்கு மேல தான் தூக்கமே
வருது. சரி பரவாயில்லை காலையில லேட்டா
எழுந்துக்கலாம்னு பாத்தா
வாக்கிங் போக முடியாம
போயிடும். சரின்னு கிளம்பி
வந்துட்டேன். அத விடு துரை. நீ எப்படி
பிரெஷ்ஷா இருக்க?!
அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லப்பா. நான் நைட் ஏ.சி-ல
தூங்குறேன்ல....அதான் பிரெஷ்ஷா இருக்கேன்!.
அப்போ ஏ.சி-ல தூங்கின நல்ல
தூங்கலாமா?!
”ஆமா கந்தா. நீ வேணும்னா
எங்க வீட்ல வந்து
படுத்துக்கோ”
கந்தசாமி சற்று யோசித்தார். ”இல்ல
துரை அது சரிப்படாது, மிஸ்ஸி தப்பா எடுத்துக்கும்!
நான் பையன் கிட்ட
சொல்லி வீட்ல ஏ.சி போட சொல்லிடுறேன். சரி நான் கிளம்புறேன்
துரை” என்று சொல்லிட்டு
தெம்பாக வீட்டுக்கு கிளம்பினார்
கந்தசாமி.
வீட்டுக்கு சென்றவுடன் மகனிடம் இதை
பற்றி பேசலாமா என்று
ஒரு தயக்கம். கந்தசாமியின்
மகன் ரவி குளிச்சிட்டு
இருந்தான். ரவி டிப்ளமோ முடித்துவிட்டு வெட்டியாக
சுத்திட்டு இருந்த காலத்தில் ரயில்வே ஜி.எம் அகர்வாலுக்கு டிரைவர்
ஆக இருந்தார் கந்தசாமி.
ஜி.எம்யிடம் கெஞ்சி ரவிக்கு ஐ.சி.எப்
ஷெல் டிவிசன்ல ரவிக்கு ஒரு வேலையை
வாங்கிக் கொடுத்தார். பின் தன்
மாமன் மகளான எஸ்தரை கல்யாணம் பண்ணிக்கொண்டான் ரவி. எஸ்தர்
எளிமையான பெண். காஞ்சிபுரம் அருகில்
உள்ள ஒரு சிறிய
கிராமத்தில் வளர்ந்தவள். 12வது வரை படித்தவள். நோக்கியாவில் சூப்பர்வைசராக
பணிபுரிந்து வந்தாள். திடுதிப்பென நோக்கியா இழுத்து மூடப்பட்ட பின் அடுத்தது
என்ன என்று புரியாமல்
நின்ற நேரத்தில் ரவியுடன் திருமணம் நிச்சயிக்கப்பபட்டது.
கல்யாணத்துக்கு பிறகு
பெரம்பூரிலேயே ஒரு எக்ஸ்போர்ட்
கம்பெனியில் சூப்பர்வைசராக
இருந்தாள். மகன் ஜோசப் பிறந்த
பிறகு அவனை பார்த்து
கொள்வதற்காக வேலையை விட்டு விட்டாள். ஜோசப் இப்போ
மூன்றாவது படிக்கிறான்.
குளித்து முடித்து வெளியே
வந்து 7 மணி ட்யூட்டிக்கு ரெடி ஆகி
கொண்டிருந்தான் ரவி. கண்ணாடி முன் நின்று தலை துவட்டி கொண்டிருந்தான் ரவி. அவனுக்குப்
பின்னாடி தயக்கத்தோடு நின்றார் கந்தசாமி. உடனே திரும்பிய ரவி “சொல்லுப்பா” என்றான்.
ஏ.சி ஒன்னு வாங்கி
போடலாமா?என்றுபடக்கென்றுகேட்டுவிட்டார்.
இதென்னப்பா புது
ஆசை?
ஆஸ்பெஸ்டாஸ்
ஷீட் சூடு உடம்புக்கு
ஆகல, தூக்கமும் வர மாட்டேங்கிறது. இந்த ஏ.சி. வாங்கிட்டா நிம்மதியா தூங்கலாம் என்று கந்தசாமி சொல்லி
முடிப்பதற்குள் ”ஏம்பா எஸ்தரும்
இப்போ வேலைக்கு போறது
இல்ல! என் சம்பளத்தையும் உங்கபென்ஷனையும் வெச்சிக்கிட்டு வீட்டு
வாடகை, கரண்ட் பில், ஜோசப் ஸ்கூல் பீஸ் உங்களுக்கு
மருந்து செலவுன்னு நிறைய
செலவு வெச்சிக்கிட்டு நானே
முழிச்சிட்டு இருக்கேன். இதுல ஏ.சி
எல்லாம் வாங்க முடியாதுப்பா என்று
படபடத்தான் ரவி. கந்தசாமிக்கு அதுவும் சரியென்று பட்டது. ”நான் ஒரு மடயன்; இதெல்லாம் யோசிக்காம
கேட்டுட்டேன்; இத விட்ருப்பா” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே எஸ்தர் கூடையோடு
வந்தாள். கூடையை குடும்மா நான்
போய் பால் வாங்கிட்டு
வரேன் என்று கிளம்பினார்
கந்தசாமி. ரவியும் வேலைக்கு
புறப்பட்டான். இருந்தாலும் கந்தசாமிக்கு
ஏ.சி-ல தூங்கணும் என்கிற
ஆசை அடங்க வில்லை. பால்
வாங்க போற வழியில்
பல்லவன் லாட்ஜ் கண்ணில் பட்டது. ஒரு நாளைக்கு மட்டும் ஏசி ரூம்ல தூங்கிப்
பாத்துட்டா என்ன என்று யோசித்துக்கொண்டே
தெம்பாக உள்ளே நுழைந்தார். ரிசப்ஷன்ல அந்த லாட்ஜ் ஊழியர் பேப்பர் படிச்சிட்டு இருந்தான். கந்தசாமியைப் பார்த்தவுடன் “சொல்லுங்க சார்… ரூம்
வேணுமா?” என்றான்!
ஆமாம்பா!
கவுண்டரில் இருந்து எட்டிப்பார்த்தவன் கந்தசாமி கையில் இருந்த கூடையை
பார்த்துக்கொண்டே “என்ன சார் விருந்தாளிங்க யாராவது வராங்களா? அட்வான்ஸ்
புக்கிங்கா...? என்றான்.
“நான் லோக்கல்னு பார்த்தாலே தெரியுதா?”
“இல்ல சார் கையில பால் கூடை வச்சிருக்கீங்க அதான் கேட்டேன்”
“சரிதாம்ப்பா. நான் லோக்கல்தான். விருந்தாளிங்க யாரும் வர்ல. வீட்ல ஒரே
டார்ச்சர்… அதான் ஒரு நாளாவது
கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு பாத்தேன்.
ரூம் இருக்கா”
”டபுள் ரூம்
தான சார் ?” என்றான். “என்ன பா நான்
ஒருத்தன் தான் எனக்கு
எதுக்கு டபுள் ரூம் ?!
”சார் உங்கள
மாதிரி எத்தனை பேரை பாத்திருப்பேன்” என்று நக்கலாகச்
சிரித்தான்.கொஞ்ச நேரம்
குழம்பிய கந்தசாமி பிறகு
சுதாரித்தார் ; ”டேய் தம்பி என்
வயசு ஆளுங்க கிட்ட
இப்படி தான் கேட்பியாடா?” மறுபடியும் நக்கலாக
சிரித்துக்கொண்டே ”அடபோங்கசார்..... உங்க
வயசு ஆளுங்க தான் இப்டி பண்றதே” என்றான். கந்தசாமிகு ஒரு மாதிரி
ஆகிவிட்டது. “நான் அப்படி இல்ல டா….ரூம் இருக்கான்னு பாரு? அட...போங்க சார் என்றபடி புக்கிங்
நோட்டில் பெயர், விலாசம் எல்லாம் குறித்து கொண்டான். மறுபடியும் “சிங்கிளா டபுளா....?” என்றான். கடுப்பான கந்தசாமி டேய்..........என்று
அடக்கினார். சாரி
சார். ஏசியா, நான் ஏசியா என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் கணீர் குரலில் ”ஏசி”
என்றார் கந்தசாமி. எவ்வளவு என்றார். 2500 ரூபா
சார். ஆப்பர் போக 1999 என்று அவன் போட்ட போட்டில் முழி பிதுங்கிய கந்தசாமி
விடுவிடுவென நடக்க தொடங்கினார். ஏன் சார்
கெளம்பீட்டீங்க என்றான். போடா... அந்த
காலத்துல என் சம்பளமே
200ரூபா தான்
… 2000 ரூபாவாம் … போடா டேய் …. என்று தெருவில் கலந்தார்.
பால் பூத்துக்கு
சென்று பால் வாங்கி
கொண்டு, பேப்பர் கடையில் தந்தி
வாங்கி கொண்டு வீட்டை
நோக்கி நடந்தார். ஆனால் ஏ.சி ஆசை
அவரை விடவில்லை அடுத்து
என்ன செய்யலாம் என்று
சிந்திக்க தொடங்கினார்! வீடு திரும்பும்
வழியில் நெட் சென்டர் ஒன்றில் ரயில் டிக்கெட்
புக் செய்து தரப்படும்
என்ற பேனர் ஜொலித்தது. அட
ரயில்ல ஏ.சி கோச்ல தூங்கிட்டே போலாமே என்ற
எண்ணம் வந்தது. என்ன தான்
கந்தசாமி ரயில்வேயில் பணிபுரிந்து
இருந்தாலும் அவர் வாழ்நாளில் ஒரு
முறை கூட ஏ.சி
கோச்சில் பயணம் செய்ததில்லை. அவருக்கு செகண்ட் கிளாஸ்
நான் -ஏசி பாஸ் தான்
உண்டு.
கடைக்குள் நுழைந்தார். அப்துலைப் பார்த்தவுடன் ”நீ இங்கதான் வேலை செய்கிறாயா?” என்றார். ஆமாம் தாத்தா என்று சினேகமாக
சிரித்தான் அப்துல். அந்த நெட் சென்டரின் முதலாளி மீரான்பாய்க்கு
நிறைய கடைகள் உண்டு. தனது கடைகளுக்கு நம்பிக்கையான ஆள் வேண்டும் என்பதால் தனது தூரத்து
சொந்தங்களையே அவர் அழைத்து வந்து தங்க வைத்து
வேலை கொடுப்பார். இந்த பசங்க எல்லாரும் கந்தசாமி குடியிருக்கும்
வீட்டுக்கு எதிரிலுள்ள மொட்டைமாடியில் தான் வசிக்கிறார்கள்.
டிக்கட் புக்கிங்லாம்
நீதான் பன்றயா என்றபடி வைகையில் மதுரைக்கு ஒரு டிக்கட் இருக்கான்னு பார்க்க சொன்னார்.
மதுரையில் என்ன விசேசம் என்றவனுக்கு ”அங்க தான்டா என்
பொண்ண கொடுத்திருக்கேன்; பேரன் ஞாபகமாகவே
இருக்கு அதான் போய்
ஒரு எட்டு பாத்துட்டு
வரலாம்னு பாக்கறேன் என்று வாய்க்கு வந்ததைச் சொன்னார். ஏசியா நான் ஏசியா என்று
கேட்டவனுக்கு செகண்ட் ஏசி போடுப்பா என்றார்.
அவனும் கொஞ்சநேரத் தேடலுக்குப் பின் “ இருக்கு
தாத்தா. ஒரு டிக்கெட் ரூபாய் 2800. புக் பண்ணிடவா என்றான். கந்தசாமி மீண்டும் விழி
பிதுங்கி எழுந்தார் … சரி
வரேண்டா என்று கிளம்பினார். என்ன தாத்தா
கிளம்பிடீங்க டிக்கெட் புக்
பண்ண வேண்டாமா என்றான்
அப்துல். அட போடா இந்த
காசுக்கு நான் பிளைட்லயே
போயிடுவேன்…என்று கிளம்பினார்.
சோகமாக வீட்டுக்கு
வந்த கந்தசாமி எஸ்தரிடம்
பால் பாக்கெட்டை கொடுத்து
விட்டு பேப்பர் எடுத்து
சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டார். அன்று வெள்ளிக்கிழமை, பேப்பரை திறந்தவுடன்
சினிமா விளம்பரங்களாகவே இருந்தது. அடுத்த ஐடியா
வந்தது கந்தசாமிக்கு… தியேட்டர்
போனால் ஏ.சி யில் தூங்கலாம்
என்று எண்ணினார். டீ போட்டு
எடுத்து வந்தாள் எஸ்தர். டீயை
குடித்துவிட்டு தெம்பாக குளிக்கச்
சென்றார். குளித்து முடித்து டிபன்
சாப்பிட்டு விட்டு பேரன்
ஜோசப்பை ஸ்கூலுக்கு அழைத்து
செல்ல தயாரானார்.
எஸ்தரை கூப்பிட்டு
”மனசு கொஞ்சம் சரி
இல்ல... படத்துக்கு போய்ட்டு
வந்துடறேம்மா. மதிய சாப்பாட்டுக்கு
வந்துடுவேன்” என்று சைக்கிளை எடுத்து
கொண்டு கிளம்பினார். பேரனை
ஸ்கூலில் இறக்கி விட்டுட்டு தியேட்டர்க்கு
புறப்பட்டார். எல்லா
தியேட்டர்லயும் முதல் ஷோ 11
மணிக்குத் தான். மணி
அப்போ 9:15 தான்
ஆனது. என்ன செய்வது என்று
தெரியாமல் சிறுநீர் கழிக்க
சைக்கிளை ஓரம் காட்டினார். அந்தச் சுவரில் மூலக்கடையில் உள்ள
ஒரு தியேட்டரின் 10 மணி ஷோ
போஸ்டர் ஒட்டி இருந்தது. ஷோ
டைமை பார்த்தவர் படத்தின் போஸ்ட்டரை
கவனிக்கவில்லை, விடுவிடுவென சைக்கிளை மிதித்தார். 9:30 மணிக்கெல்லாம் அந்த தியேட்டரை அடைந்தார்.
கொஞ்ச பேர் மட்டுமே
இருந்தனர், டிக்கெட் கவுண்டர் ஓபன்
பண்ண உடன் முதல்
ஆளாக டிக்கெட் வாங்கினார். தியேட்டருக்கு வந்த கூட்டம்
முக்கால்வாசிக்கு மேல் லுங்கி (கைலி) தான் கட்டியிருந்தனர். அப்போதே சின்ன
சந்தேகம் கந்தசாமிக்கு. அங்க படம்
பாக்க வந்தவன் எல்லாம்
ரெகுலரா வரவனுங்க போல ஒவ்வொருத்தணும் மற்றவனை
நலம் விசாரிச்சிக்கிட்டானுங்க.
மணி 10 ஆனது இன்னும்
ஷோ ஆரம்பிக்கலையே என்று
கவுண்டருக்கு சென்று விசாரித்தார்
கந்தசாமி , இருங்க
சார் கூட்டம் வரட்டும்
என்றார் டிக்கெட் கவுண்டரில்
இருந்தவர். கந்தசாமியின்
டவுட் அதிகரித்தது. எங்கயோ சர்ரு
சர்ருன்னு சத்தம் கேட்டது. என்னவென்று பார்த்தல்
தியேட்டரை கழுவி தள்ளிட்டு இருந்தாங்க
அப்பவும் சுதாரிக்கவில்லை கந்தசாமி. ஒருவழியா 10:20 க்கு
தியேட்டர் கதவை திறந்தார்கள். திறந்தவுடன் வந்தவன்
எல்லாம் முண்டி
அடிச்சிக்கிட்டு ஓடி போய்
ஒரு ரோவுக்கு ஒருத்தன் கார்னர் சீட்டாக பாத்து உக்காந்தானுங்க. பதற்றம் தொடங்கியது
கந்தசாமிக்கு …
சரி.. என்று தானும்
ஒரு கார்னர் சீட்டில் போய்
அமர்ந்தார். படம் போட்டான்; படத்தின் பெயர்
“டாப்லெஸ்”. நடுக்கம்
ஆரம்பித்தது கந்தசாமிக்கு.
படம் போட்டவுடன் ஒரு கூட்டம்
சரக்கை பெப்சியோடு கலக்க ஆரம்பித்தது. சிலர் வேறு
சில சல்லாப வேலைகளிலும் ஈடுபட தொடங்கிவிட்டார்கள். ஒரு வித
பயம் கலந்த விரக்தியுடன்
அந்த அஜால் குஜால்
படம் ஓடும் தியேட்டரை
விட்டு வெளியேறினார். வெளியே
வெயில் கொளுத்தியது. உடனே வீட்டுக்கு திரும்ப
மனமில்லை. மனம் போன போக்கில்
சைக்கிளை மிதித்தார். மதிய சாப்பாட்டிற்குத்தான் வீட்டுக்குச் சென்றார்.
மறுநாள் காலை
லேட்டாக எழுந்தார். வழக்கமாக அஞ்சரை மணிக்கெல்லாம் நடைப்பயிற்சிக்குப்
போறவர் அன்று ஆறு மணிக்கு மேல் தான் சென்றார். பிரெட்ரிக் துரை
நடந்து கொண்டிருந்தார். என்ன கந்தா
லேட் என்றார்? ஒண்ணுமில்ல துரை
ரொம்ப நேரம் தூங்கிட்டேன்
என்றார். ஏ.சி மேட்டர் என்ன
ஆச்சு என்றார் துரை; பதிலே சொல்லல.
வழக்கத்தை விடவும் சோர்வாக
காணப்பட்டார் கந்தசாமி. துரை எனக்கு
தல சுத்துது சுகர்
லோ ஆயிடுச்சுனு நினைக்கிறேன் வா
போய் டீ குடிச்சிட்டு வரலாம்
என்றார் கந்தசாமி.
டீக்கடைக்கு
போன உடன் துரை
தனக்கு பில்டர் கோல்ட் பிளாக்
வாங்கி குடிக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு மீடியம்
டீ சொன்னார் கந்தசாமி. டீக்கடையில்
சத்தமாக ரேடியோ ஒலித்து
கொண்டு இருந்தது. பக்தி பாடல்
முடிந்து இசைஞானி பாடல்கள்
ஒலிக்கத் தொடங்கின. முதல் பாடலே
"அன்னக்கிளி உன்ன தேடுது"
கந்தசாமிக்கு அந்த பாட்டை
கேட்டவுடன் மஞ்சுளா ஞாபகம்
வந்துவிட்டது. இன்னொரு உலகத்திற்கே சென்று
விட்டார் கந்தசாமி.
இதையெல்லாம் துரை கவனிச்சிக்கிட்டே இருந்தார். என்ன கந்தா ஒரு
மாதிரி நிக்குற டீ ஆறிட
போகுது அத குடி. இல்ல
துரை என் மஞ்சு
ஞாபகம் வந்துடுச்சி. என்ன மாதிரி
ஒருத்தன வெச்சி 28
வருஷம் குடும்பம் நடத்தினவ; நான் பண்ண
எல்லாவற்றையும்
பொறுத்துகிட்டு என் குடும்பத்தயே
நிலை நிறுத்தினவ. என் மேல
எனக்கே மரியாதை வந்ததுக்கு
அவ தான் காரணம். இன்றைக்கும் அவ
ஒரு ரூபா அளவு
குங்கும பொட்டும், மஞ்சள் வாசனையும் என்னை என்னமோ
பண்ணுது, என்னதான்
மகன், மகள், மருமகள், பேரன், பேத்தின்னு
இருந்தாலும் ஏதோ காலியாவே இருக்கு…
மனசு ஏதோ
பாரமாவே இருக்கு துரை
என்று சொல்லிக் கொண்டே நெஞ்சைப்
பிசைந்த்தார்; என்னவோ சரியில்லை என்று துரை யூகிப்பதற்குள் கந்தசாமி ஏசப்பா
என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அலறி அதே
இடத்தில் நிலை தடுமாறி
விழுந்தார். துரை அருகில் இருந்தவர்களை துணைக்கழைத்து கந்தசாமியை தூக்கி
ஆட்டோவில் போட்டு ரயில்வே
ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். டாக்டர் வந்து
பாத்துட்டு “ ஏற்கனவே உயிர் போயிட்டதுங்க; கார்டியாக் அரெஸ்ட்” என்றார். மருத்துவமனை சம்பிரதாயங்கள்
முடிந்து அவரது சடலம் மாலை வீடு
வந்து சேர்ந்தது. சங்கு ஊதறவன்,
பறை மேளம் எல்லாம்
சொல்லிவிட்டாச்சி என்றான் ரவியின்
மச்சான் பீட்டர், சொந்தக்காரர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். கந்தசாமிக்கு கோட் சூட்
மாட்டப்பட்டது, பாஸ்டர் வந்து
ஜெபம் பண்ணார். ஐஸ் பெட்டியும்
வந்தது. கந்தசாமியை அதில் கடத்திவிட்டு
கண்ணாடியை மூடினார்கள். மகன்
ரவிதான் ஸ்விட்சை போட்டான்.
கந்தசாமியின் ஏ.சி ஆசை கடைசியாக
ஐஸ் பெட்டியில் நிறைவேறியது.
Good story with some good captions, highlights (ilayaraja song in tea shop,the word u used cardiac arrest instead of heart attack ) think you worked hard, keep going.
ReplyDeleteall the best for upcoming story!!!
Thank you 😊
Deletetherikka vittuteenga bro 😀
ReplyDeleteThank you da��
DeleteVignesh bro super
ReplyDeleteVignesh - good flow of thought and fine compilation of the happenings.
ReplyDeletelooking forward to read more stories from you.
Thank you😊
DeleteNice one brother
ReplyDeleteThank u bro
DeleteGood one, Vignesh
ReplyDeleteClassic vignesh.������
ReplyDeleteIt was filled with humour, embarrassment, pride and finally peace. Loved the fact that it was very much a causal story with unexpected turns and end. A dream which unveiled itself to reality. Thank you for sharing this creation. I'm a lazy reader. But I enjoyed the emotions and thoughts of கந்தசாமி. 😊
ReplyDeleteOwh wow I didn’t expect he will die in the end . I thought he will have his dream of sleeping in an AC In Fredrick’s home . Unexpected ending. Proud of your achievements ❤️
ReplyDeleteதல எதிர்பார்க்காத ஒன்று. மென்மேலும் எதிர்பார்கிறேன், எழுத்துப்பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்...
ReplyDeleteThank you Thala ❤️
ReplyDeleteActual flow is appreciable vc
ReplyDeleteMy thought it will be finish an average middle class story would therefore be over but the end is an emotional
Keep going